மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் ஆபத்தான கான்கிரீட் கற்கள்; புனித நீராட முடியாமல் பக்தர்கள் தவிப்பு. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 8 January 2026

மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் ஆபத்தான கான்கிரீட் கற்கள்; புனித நீராட முடியாமல் பக்தர்கள் தவிப்பு.


போச்சம்பள்ளி, ஜன.08:


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய தரைப்பாலம் பழுதடைந்த நிலையில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் பொதுமக்களின் வசதிக்காக அருகிலேயே புதிய மேம்பாலம் கட்டப்பட்டாலும், பழைய தரைப்பாலம் அகற்றப்படாமல் இருந்ததால் விபத்து அபாயம் தொடர்ந்தது.


அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்யவும் வரும் பக்தர்கள் பழைய பாலத்தின் மீது ஏறி ஆற்றில் இறங்கியதால், இதற்கு முன் பல உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழைய பாலத்தை இடிக்கும் பணியைத் தொடங்கியது.


ஆனால் பாலம் இடிக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள், கான்கிரீட் தூண்களுக்குள் இருந்த இரும்புக் கம்பிகளை மட்டும் அகற்றி, உடைக்கப்பட்ட ராட்சத கான்கிரீட் கற்கள் மற்றும் சிமெண்ட் கட்டைகளை ஆற்றிலேயே விட்டுச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது ஆற்றில் நீர் ஓடுவதால், அடியில் கிடக்கும் கூர்மையான கான்கிரீட் கற்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்துள்ளன.


இதனால் புனித நீராட வரும் பக்தர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள், ஆற்றில் இறங்கும்போது கால்களில் கான்கிரீட் கற்கள் குத்தி பலத்த காயமடைந்து வருகின்றனர். அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் நிலையில், விபத்து அபாயம் மேலும் அதிகரித்துள்ளது.


பழைய பாலத்தை இடித்ததன் நோக்கம் விபத்துகளைத் தடுப்பதற்காக இருந்தாலும், தற்போது ஆற்றில் விடப்பட்டுள்ள கான்கிரீட் கற்கள் புதிய அபாயமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, இடிக்கப்பட்ட பாலத்தின் மீதமுள்ள கான்கிரீட் கற்கள் மற்றும் சிமெண்ட் கட்டைகளை உடனடியாக ஆற்றிலிருந்து அப்புறப்படுத்தி, பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராட ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad