ஊத்தங்கரையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 3 January 2026

ஊத்தங்கரையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.


ஊத்தங்கரை, ஜன.03:


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்த விழாவில், 700 மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கத்திற்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், 94 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 29 இலட்சத்து 48 ஆயிரத்து 825 மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதோடு, ரூ.50 இலட்சம் மதிப்பில் கடப்பாறை அணைக்கட்டு கட்டுவதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டன.

மேலும், ஊத்தங்கரை மற்றும் பர்கூர் பகுதிகளில் 1,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், 1,400 மகளிர்களுக்கு இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளும் வழங்கப்பட்டன. இவ்வாறு மொத்தமாக ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்நிகழ்வின் மூலம் பயனடைந்தனர்.


இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய அமைச்சர் அர. சக்கரபாணி, தமிழ்நாட்டிலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 86,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது 3,55,197 மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


இதனுடன், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபது ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கும் புதிய திட்டமாக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்” இன்று நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 23 இலட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad