ஊத்தங்கரை, ஜன.02:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்தில், தனியார் ஷூ கம்பெனி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மற்றும் ஒரு இருசக்கர வாகனம் தீப்பிடித்து முழுவதுமாக எரிந்து சேதமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த 23 தொழிலாளர்கள் அனைவரும் உயிர் தப்பினர்.
கொட்டுகாரம்பட்டி பகுதியில் இருந்து போச்சம்பள்ளி சிப்காட்டில் செயல்படும் தனியார் ஷூ கம்பெனிக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு காலை 6.50 மணியளவில் பேருந்து புறப்பட்டது. கல்லாவியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (51) பேருந்தை ஓட்டி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மிட்டப்பள்ளி பகுதியில் மேலும் சில ஊழியர்களை ஏற்றுக்கொண்டு, ஊத்தங்கரை நாட்டாண் கொட்டாய் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அப்போது திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஒரு கார், தனியார் கம்பெனி பேருந்தை முந்திச் செல்ல முயன்ற நிலையில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தில் மோதியது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்ததுடன், அந்த தீ பேருந்திற்கும் பரவியது.
பேருந்தில் தீப்பற்றியதை உணர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக பேருந்திலிருந்து குதித்து வெளியேறியதால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும், இருசக்கர வாகனமும் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் முழுவதுமாக தீயில் கருகி சேதமடைந்தன.
தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து, தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்புடன் வாகனம் இயக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.



No comments:
Post a Comment