ஊத்தங்கரை, டிச.30:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI Act, 2005) நடைமுறைகளை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தகவல் வழங்கத் தவறியதற்காக ரூ.10,000 இழப்பீடு வழங்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, அந்த அலுவலகத்தின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை கல்லாவி அடுத்த செங்கழநீர்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் வேடி என்பவர், பெரியகொட்டகுளம் ஊராட்சியில் 15.08.2022 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத் தீர்மானத்தின் நகலை வழங்குமாறு, 29.08.2022 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். சட்டப்படி 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டிய தகவல், எந்த காரணமும் தெரிவிக்காமல் வழங்கப்படாததால், மனுதாரர் 10.10.2022 அன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையம்-க்கு புகார் மனு அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக 14.11.2025 அன்று நடைபெற்ற விசாரணையில், மனுதாரருக்கு உரிய தகவல் வழங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 19(8)(b)ன் கீழ், மனுதாரருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,
-
இழப்பீடு வழங்கப்பட்ட விவரம்
-
பிரிவு 20(1) மற்றும் 20(2)ன் கீழ் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்க அறிக்கை
இவ்விரண்டையும் 21.01.2026-க்குள் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment