போச்சம்பள்ளி | டிசம்பர் 30:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தாதம்பட்டி பக்கத்திலுள்ள ஆனந்தூர் ஏரியில் சட்டவிரோதமாக மண் கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ஊத்தங்கரை தாசில்தார் ராஜலட்சுமி, துணை தாசில்தார்கள் சகாதேவன் மற்றும் ஜெயபால் ஆகியோர் ரகசியமாக வேறொரு காரில் ஆனந்தூர் ஏரிக்கு ஆய்வுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, ஏரிக்குள் ஜேசிபி வாகனம் மூலம் மண் அள்ளப்பட்டு, டிப்பர் லாரியில் ஏற்றப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் வந்ததை கண்ட ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி ஓட்டுநர்கள், வாகனங்களை வேகமாக ஏரியிலிருந்து வெளியே எடுக்க முயன்றுள்ளனர். இந்தச் சூழலில், ஜேசிபி ஓட்டுநர் தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள் மீது ஜேசிபி வாகனத்தின் முன்புற பக்கெட்டை உயர்த்தி நேரடியாக மோதி கொலை செய்ய முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த தாக்குதல் முயற்சியில், துணை தாசில்தார் சகாதேவன், கடும் போராட்டத்திற்கு பிறகு சினிமாவை மிஞ்சும் வகையில் ஜேசிபி வாகனத்தின் உள்ளே ஏறி, வாகனத்தை ஆப் செய்து நிறுத்தியதால், அதிகாரிகள் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக போச்சம்பள்ளி காவல் நிலையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், ஜேசிபி வாகனம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் ஜேசிபி ஓட்டுநர் மற்றும் டிப்பர் லாரி ஓட்டுநர் இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மண் கடத்தலை தடுக்கச் சென்ற அரசு அதிகாரிகள் மீது ஜேசிபி வாகனம் மூலம் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பவம், போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Post a Comment