ஓசூரில் மலைக்கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 18 March 2022

ஓசூரில் மலைக்கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.


ஓசூர் மலை திருக்கோவில் திருத்தேரோட்டம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற மலை திருக்கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

ஓசூர் மாநகரில் சுமார் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற மலை திருக்கோவில் என்றழைக்கப்படும், அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இன்று பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. சென்ற வாரம் கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான  திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. 

இதில், முன்னதாக அதிகாலையில் மூலவர் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து அலங்கரித்து எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளான அம்பாளும் சுவாமியும் கல்யாண சூடேஸ்வரராக காட்சியளித்து அருள்பாலித்தனர். 

பின்னர், அம்மையப்பனான உற்சவ மூர்த்திகளை திருத்தேரில் அமர்த்தி சிறப்பு பூஜைகள் செய்து மங்கள ஆரத்தி செய்யப்பட்டது. இதே போல விநாயகர், பாலசுப்பிரமணியர், காலபைரவர் உற்சவ மூர்த்திகளையும் தனித்தனி தேர்களில் அமர்த்தி பூஜைகள் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, ஓசூர் மாநகர மேயர் சத்யா, ஓசூர் துணை ஆட்சியர் மற்றும் துணை மேயர் ஆகியோர், திரளான பக்தர்களுடன் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். 

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து, "சம்போ மகாதேவா; அரோகரா மகாதேவா" என்ற கோஷம் விண்ணைப் பிளந்து ஒலித்த நிலையில் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. 

அப்பொழுது வந்திருந்த பக்தர்கள் உப்பு மிளகு மற்றும் வாழைப்பழங்களை பாரம்பரிய மரபுப்படி திருத்தேரின் மீது வீசி எறிந்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். 

இந்தத் திருவிழாவில் தமிழகம் மட்டும் இன்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திருத்தேர் ஆனது நான்கு மாட வீதிகளிலும் உலாவந்து மாலையில் மீண்டும் நிலைநிறுத்தப்படும்.

திருத்தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், ஓசூர் மாநகர் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் டிஎஸ்பி சிவலிங்கம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், பக்தர்கள் அச்சமின்றியும் சிரமம் இன்றியும் சுவாமி தரிசனம் செய்து திருத்தேரோட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு செய்வதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

தொடர்ந்து மாநகரின் பல்வேறு இடங்களிலும் அன்னதானமும் பிரசாத விநியோகமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad