ஊத்தங்கரை – டிசம்பர் 21:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில், 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மக்கள் பெரும் பங்கேற்புடன் சிறப்பாகவும், ஒழுங்காகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கல்லாவி சாலை, புதிய காவல் நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை எஸ். கொழந்தை (அம்மன் ஷாயில், ஊத்தங்கரை), ஏ. முருகதாஸ் (பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி, தருமபுரி), எம்.சி. திருஞானம் (ஆசிரியர், அதியமான் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை) மற்றும் ஏ. சித்தேஷ் (இசைப்பிரியா ஹார்டுவேர்ஸ், மிட்டப்பள்ளி) ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த முகாமின் முழுமையான ஏற்பாடுகளை டாக்டர் கே. விக்னேஷ் (MBBS, MD – Anatomy) முன்னின்று மேற்கொண்டார். முகாமில் பொது மருத்துவம், தோல் மருத்துவம், அறுவை சிகிச்சை, காது–மூக்கு–தொண்டை மருத்துவம், மகப்பேறு தொடர்பான சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர் மருத்துவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
முகாமில், நாள்பட்ட சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தோல் நோய்கள், ஆறாத புண்கள், குடல் இறக்கம், சிறுநீரக கல், இரத்தசோகை, காது–மூக்கு–தொண்டை பிரச்சனைகள், கை–கால் மற்றும் முதுகு வலி, வயிற்றுப்புண் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், BMI பரிசோதனை மற்றும் பிசியோதெரபி பயிற்சிகள் ஆகியவை முழுமையாக இலவசமாக செய்து வழங்கப்பட்டன. உதவி மருத்துவர்கள், செவிலியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன் விரும்புவோர் இணைந்து பணியாற்றியதன் காரணமாக முகாம் சீராகவும், பயனுள்ளதாகவும் நடைபெற்றது. இந்த இலவச மருத்துவ முகாமின் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment