ஊத்தங்கரை, டிசம்பர் 18:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட வண்டிக்காரன்கொட்டாய் பகுதியில் உள்ள தார் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரிவதில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் தொடர் விபத்துகள் நடைபெற்று வருவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஊத்தங்கரையிலிருந்து தாண்டியப்பனூர், வண்டிக்காரன்கொட்டாய், நாப்பிராம்பட்டி, வசந்தபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் இந்த பிரதான சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், தனியார் நிறுவன வாகனங்கள், மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சுற்றுவட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையையே முக்கிய போக்குவரத்து பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
சாலையின் இருபுறமும் மண்டி கிடக்கும் முட்புதர்களால் எதிரே வரும் வாகனங்கள் கடைசி நேரத்தில் மட்டுமே தெரிவதால், குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கி கை, கால் முறிவு உள்ளிட்ட காயங்களுடன் உயிரிழப்புகளும் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இரவு நேரங்களில் சாலையோர தெருவிளக்குகள் பல இடங்களில் எரியாததால், பள்ளி மாணவ, மாணவிகள் சுடுகாட்டு பாதையை கடக்க அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக சாலையோரத்தில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றியும், செயலிழந்த தெருவிளக்குகளை சரிசெய்தும், விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

.jpeg)

No comments:
Post a Comment