ஊத்தங்கரையில் 16-வது தேசிய வாக்காளர் தினம்: ஊத்தங்கரையில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 January 2026

ஊத்தங்கரையில் 16-வது தேசிய வாக்காளர் தினம்: ஊத்தங்கரையில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


ஊத்தங்கரை
, ஜனவரி 25 :


16-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் இன்று (25.01.2026) பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இந்த பேரணிக்கு, ஊத்தங்கரை (தனி) சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருமான சிவக்குமார் தலைமையேற்று நடத்தினார். நிகழ்வில் ஊத்தங்கரை வட்டாட்சியரும், உதவி வாக்காளர் பதிவு அலுவலருமான ராஜலட்சுமி மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, நகரின் முக்கிய பகுதிகளான நான்கு முனைச் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பேரணியில் ஊத்தங்கரை யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டு, வாக்களிப்பதன் அவசியம், ஜனநாயக கடமையின் முக்கியத்துவம் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து முழக்கங்களை எழுப்பினர்.


பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இந்த பேரணி, ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கின் மதிப்பையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது. இறுதியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் வாக்குப்பதிவில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, மீண்டும் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே பேரணி நிறைவு பெற்றது. 

No comments:

Post a Comment

Post Top Ad