சூளகிரி அருகே அதிவேக டிப்பர் லாரி மோதல்: வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி, இருவர் படுகாயம்; தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 29 January 2026

சூளகிரி அருகே அதிவேக டிப்பர் லாரி மோதல்: வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி, இருவர் படுகாயம்; தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்.


சூளகிரி, ஜன. 29:


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சப்படி பகுதியில், அதிவேகமாக இயக்கப்பட்ட டிப்பர் (கிரஷர்) லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பெரிய சப்படியைச் சேர்ந்த அஜித்குமார் (27), முரளி, முனுசாமி ஆகிய மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சப்படி பகுதியில் உள்ள கிரஷர் யார்டு நோக்கி சென்ற டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.


இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அஜித்குமார் மீது லாரி ஏறியதில், அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற முரளி மற்றும் முனுசாமி ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சப்படி பகுதியில் செயல்பட்டு வரும் கிரஷர்களுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.


இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad