33 ஏரி பாசன கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி ஊத்தங்கரையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 23 January 2026

33 ஏரி பாசன கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி ஊத்தங்கரையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.


ஊத்தங்கரை, ஜன. 23:


கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் ஏரி கிழக்கு புற கால்வாயிலிருந்து 33 ஏரிகளுக்கு பாசன கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்தக் கோரி, 33 ஏரி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், ஊத்தங்கரையில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று (ஜனவரி 24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் உமாபதி தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் மூர்த்தி, பொருளாளர் காளியண்ணன், துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், துணைச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில், பாரூர் ஏரி கிழக்கு புற பாசன கால்வாய் மூலம் சுமார் 1,341 ஏக்கர் பாசனப்பரப்பு பயனடைகிறது என்றும், ரெட்டிபட்டி ஏரி, செங்கழுநீர்பட்டி ஏரி, சின்ன கொட்டகுளம் ஏரி, கொட்டகுளம் ஏரி, பரசனேரி உள்ளிட்ட 33 ஏரிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.


மேலும், பாரூர் ஏரி கிழக்கு புற கால்வாயிலிருந்து 33 ஏரிகளுக்கு பாசன கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு 2022-ஆம் ஆண்டு ரூ.84.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை சுமார் 50 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வர கால்வாய் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, 33 ஏரி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad