ஊத்தங்கரை, ஜன. 22:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கீழ்மத்தூர் பகுதியில் உள்ள வண்ணம்பள்ளி ஆற்று மேம்பாலத்தில், மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், தாமலேரி முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கீழ்மத்தூர் முசிலிக்கொட்டாய் பகுதியில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவில் பங்கேற்பதற்காக தனியார் டிராவல்ஸ் வாகனத்தில் சென்றிருந்தனர். விழா நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, முசிலிக்கொட்டாயிலிருந்து தாமலேரி முத்தூருக்கு திரும்பிச் சென்றபோது, கீழ்மத்தூர் அடுத்த வண்ணம்பள்ளி ஆற்று மேம்பாலத்தில் வாகனம் அதிவேகமாக சென்றதால் வளைவில் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து ஊத்தங்கரை காவல் நிலையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment