கிருஷ்ணகிரி, பிப். 06:
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடியிலிருந்து கிடி வெங்கட்ராமன் கோவில் கொட்டாய் வழியாக ஜம்பத்துக்கு செல்லும் முக்கிய தார் சாலை, கடுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக கருங்கல் மேடு எனப்படும் பகுதியில் சாலை முழுவதும் சேதமடைந்து இருப்பதால், தினந்தோறும் இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் பெரும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகளும் பாதுகாப்பற்ற நிலையில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி காயமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சாலை நிலைமை மோசமாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் இந்த வழியாக செல்ல தயக்கம் காட்டி வருகின்றன. மேலும் அவசர மருத்துவ தேவைகளுக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரங்களில் கூட, இந்த கரடுமுரடான சாலையை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பழுதடைந்த தார் சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என சமூக மக்கள் மற்றும் நுகர்வோர் சங்கத்தின் மாநில தலைவர் சி. சிவன் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
.jpg)

No comments:
Post a Comment